1.2லிட்டர் தண்ணீரில் குளியல் : தர்மபுரி வாலிபர் சாதனை
செப்டம்பர் 24,2009,தர்மபுரி : தர்மபுரி அருகே, தண்ணீர் சிக்கனத்தை
வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டர் தண்ணீரில்
குளித்து வாலிபர் சாதனை புரிந்தார். தர்மபுரி அருகே நாய்க்கன்கொட்டாய்
அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டையன்; விவசாயி. இவரது மகன்
கோவிந்தசாமி(26) ஐந்தாம் வகுப்பு வரை படித்து, ஆடு மேய்த்து வருகிறார்.
ஆடுகளை ஓட்டிச் செல்லும் போது, நிலத்தின் தேவை போக பாசன தண்ணீர் வீணாவதைக்
கண்டு, தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க, விவசாயிகளிடம் சிறு பிரசாரத்தை
மேற்கொண்டார்.

ஆடுகளுக்கு
போதிய குடிநீர், காட்டுப்பகுதிக்குள் கிடைக்காததால், ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் எடுத்துச் செல்வார். ஆடுகள் குடித்தது போக, மீதமுள்ள தண்ணீரை
வீணாக்காமல், தன் உடலில் ஊற்றிக் கொள்வார். ஐந்து லிட்டர் தண்ணீரில்
துவங்கிய குளியலை படிப்படியாகக் குறைத்து, மூன்று லிட்டரில் குளிக்கும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 16 ஆண்டாக, இவர் மூன்று லிட்டர்
தண்ணீரில் குளித்து வருகிறார். தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்த, ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளித்து சாதனை படைக்க
விரும்புவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்து தருமாறு, ஊர் மக்களிடம் கேட்டுக்
கொண்டார்.
இதைத் தொடர்ந்து, நேற்று நாயக்கன் கொட் டாய் அரசு
துவக்கப்பள்ளியில், இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி
தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள்
முன்னிலையில், தன் சாதனை முயற்சியை மேற்கொண்டார். ஒன்றரை லிட்டர் தண்ணீர்
தரப்பட்டதில், இரு முறை ஷாம்பூ, இரு முறை சோப்பு போட்டு குளித்து, சோப்பு
நுரையில்லாமல் சுத்தமாகக் குளித்ததுடன், 300 மி.லி., தண்ணீரை மீதம் செய்து,
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கோவிந்தசாமி.
இது குறித்து கோவிந்தசாமி கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை
உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தவே, இது போன்ற சாதனை முயற்சியில்
ஈடுபட்டுள்ளேன். தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2
லிட்டரில் குளித்துக் காட்டினேன். இன்னும் அளவைக் குறைத்து, பெரிய அளவில்
சாதனை படைக்க முயற்சி செய்வேன். இவ்வாறு கோவிந்தசாமி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக