சனி, 28 ஜூன், 2014

மழைநீரை சேமிப்போம்..நிலத்தடி நீரை காப்போம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.



                      மழை ஏமாத்திடுச்சே... இந்த வருஷமும் தண்ணிக்கு "அல்லோல' படணுமே...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், நாம் கூறுவது வழக்கம். வராத மழைக்கு கவலைப்படுவதில் உண்மை இருக்கிறது. அதே நேரத்தில், மழை கொட்டும் போது, அதை சேமிக்காமல், வீணடிக்கும் நம் செயலை, என்னவென்று சொல்வது."கடவுள், இயற்கை, அரசு, அதிகாரிகள்,' என, ஒருவர் விடாமல் குறை கூறும் நமக்கு, நம்மிடம் உள்ள முயற்சி குறைவை, சிந்திக்க மனம் வருவதில்லை.நம்மில் பலர் கண்டுகொள்ளாமல் விட்டது "மழைநீர் சேகரிப்பு' முறை. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெ., அறிமுகம் செய்த 'மழைநீர் சேகரிப்புத் திட்டம்', வீடுகளில் கட்டாயமாக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், குடியிருப்புகளில், ஜரூராக செயல்படுத்தப்பட்டது.அதன் பின் பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, மழைநீர் சேமிப்பில் அக்கறை காட்டவில்லை. மக்களும், பொருட்படுத்தவில்லை. விளைவு, மழைநீர் சேகரிப்புத் திட்டம், மடிந்தது. மதுரையின் நிலத்தடி நீர் மட்டம், கணிசமாக குறைந்து போனது. போர்வெல்கள் தூர்ந்து போய், வறண்டன. ஆற்றுப்படுகையில் கூட, ஆழ்துளைக்கு வழியில்லை.மதுரையில், ஆண்டிற்கு 880 மி.மி., மழை, சராசரியாக பெய்கிறது. அதை முறையாக சேமித்தாலே, நீர் பற்றாக்குறை இருக்காது. "சிறு துளி, பெரு வெள்ளம்' என, படித்திருப்போம்; அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தற்போது நிற்கிறோம். தவறினால், தவிக்கப் போவது, நாமும், நம் சந்ததிகளும் தான்.முதல்வர் ஜெ., தொடங்கிய திட்டம் என்பதை மனதில் வைத்தாவது, மீண்டும் மழைநீர் திட்டத்திற்கு புத்துயிர் தர, உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். "அக்னி வெயிலில், மழைநீரை எப்படி சேமிப்பது' என, கேலி பேசுவதை விட, வரப்போகும் பருவ மழைக்கு முன்பே, நாம் தயாராக வேண்டிய அவசியத்தை, உணர வேண்டும். நிலநடுக்கத்தை கூட அறிய முடிகிறது; நீர் ஓட்டத்தை அறிய முடியவில்லை. இது தான், நம்மை நெருங்கி வரும் ஆபத்தின் அடையாளம். நம்மை விட்டு தூரம் போகிற ஈரத்தை, சேமிக்க மறந்தால், நமக்கு அதுவே பாரமாக அமைந்துவிடும்.எனவே வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவுவோம்.

"மேப்'ல் இருக்கு: "கேப்'ல் இல்லை :நகரமைப்பு விதிகளின் படி, வணிக, குடியிருப்பு கட்டடங்களில், "மழைநீர் சேமிப்பு' நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, அனுமதி தர வேண்டும் என்ற விதி உள்ளது. அனுமதி பெற வரும் கட்டட "மேப்'பில், மழைநீர் சேமிப்பு திட்டம் இடம்பெற்றிருக்கிறது. கட்டுமானம் முடிந்து பார்த்தால், அந்த இடத்தில் சுவர் தான் இருக்கும். அனுமதி அளித்ததுடன் தன் பணி முடிந்து விட்டதாக, அதிகாரிகள் நினைப்பதும், "அதிகாரியை ஏமாற்றிவிட்டோம்...' என, கட்டட உரிமையாளர் நினைப்பதுமே, இதுவரை, மதுரையில் நடந்து வருகிறது. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கண்காணித்தாலே, மழைநீர் சேமிப்பு, மீண்டும் புத்துயிர் பெற்றுவிடும். நகரமைப்பு அலுவலர் ராக்கப்பனிடம் கேட்ட போது, ""கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என்ற விதி, தற்போதும் நடைமுறையில் உள்ளது. அவை இடம் பெறும் வரைபடத்திற்கு தான், அனுமதி தருகிறோம். சிலர், இடத்தை வீணடிக்க மனமின்றி, அதற்கான இடத்தை பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்கின்றனர். தன் பயன்பாட்டை உணர்ந்து, நீர் சேமிப்பை மக்கள் தவிர்க்க கூடாது,'' என்றார்.

மழைநீர் வடிகால் "ஓகே': சேமிப்பது "எப்போ':மழைகாலத்தில் மூழ்கும் மாநகராட்சியின் ரோடுகளையும், தெருக்களையும் காப்பாற்ற, மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக பல நூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதற்காக, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 11 கால்வாய்களையும் தூர்வாரி, சிமென்ட் கரைகள் அமைத்து வருகின்றனர். மழைநீரை வெளியேற்ற இத்தனை கோடிகளை கொட்டும் போது, மழைநீரை சேகரிக்க, மாநகராட்சி "ரிஸ்க்' எடுக்கலாமே.

வீடுகளில் மழைநீரை சேகரிப்பது எப்படி : நிலத்திற்கு அடியில் பொதுவான பெரிய தொட்டி அமைத்து, ஒரு வீதியிலுள்ள அனைத்து வீட்டுக் கூரைகளிலிருந்து வாய்க்கால் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி, சேகரிக்கலாம்.ஏற்கனவே உள்ள கிணறுகளின் அருகில் வடிஅடுக்கு அமைத்து, மழை நீரை விட்டு, சேமிக்கலாம். இம்முறையில் குறைந்த செலவில் மிகுந்த அளவில் நீரை சேமிக்க இயலும். ஆவியாதல் போன்ற சேதாரங்கள் குறைவு. ஆனால் 4 மாதங்கள் பெய்யும் மழை நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் அளவுக்கு சேகரித்திட, மிகப்பெரிய அளவிலான நீர்தேக்கத்தொட்டிகள் தேவைப்படும்.

நிலத்திற்கு அடியில் நீர் சேமிப்பு:நிலத்திற்கு அடியில், நீர் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் பெருக்கத்திற்கு உதவும். கால இடைவெளி விட்டு மழை பெய்யுமிடங்களில், மழை நீரை மிகுந்த அளவில் சேமிக்க இயலும். இதனால் மழை நீர் வீணாவது குறையும். வீட்டின் கூரை மேற்பரப்பிலிருந்து மழை நீரை சேமிப்பு, தூர்ந்த கிணறு அல்லது குழாய் கிணறு மூலம் சேமிப்பு, பழுதான அடிபம்புகள் மூலம் சேமிப்பு, துளைக்கிணறுகளுடன் கூடிய கால்வாய், நீர்குழிகள் மூலம் சேமிப்பு என பல வகைகளில் சேமிக்கலாம்.

செலவு எப்படி:வீட்டின் கூரையிலிருந்து மழை நீரை சேகரிப்பது, கோடைகாலங்களில் நீர் தட்டுப்பாட்டை போக்கும். சுமார் 100 ச.மீ., பரப்பு மழை நீர் சேமிப்பு மேற்கூரை அமைக்க ரூ.5 ஆயிரமாகும். பல கட்டடங்கள் கொண்ட வளாகம், நீர் உட்புகும் கிணறு அமைப்புடன் அமைக்க ரூ.ஒரு லட்சத்து 85 ஆயிரமாகும்.குறிப்பிட்ட அளவில் குழி தோண்டி, அதில் சரளை, கூழாங்கற்களை இட வேண்டும். பின் சிறு கற்களை இடலாம். அதன்மேல் மணல் கொட்டி அமைக்க வேண்டும். மழை நீரை நேரடியாக விடாமல், சிறியளவில் வடிகட்டி விட்டால், தூசிகள் செல்வது தவிர்க்கப்படும்.

எவ்வளவு சேகரிக்க இயலும்: கூரை மேற்பரப்பு 100 ச.மீ., இருந்தால், ஓராண்டில் பெய்யும் சராசரி மழையளவு 1100 மி.மீ., இருந்தால், 80 சதவீதம் வரை 61, 600 லிட்டர் சேமிக்கலாம் என பொதுப்பணித்துறையின் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார மையம் குறிப்பிட்டுள்ளது.

மழை நீர் சேகரிப்பின் பயன்கள்:
* நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
* ஏற்கனவே உள்ள கிணறுகளில் நீர் பெருக்கம் ஏற்படும்.
* வீடுகளில் விரிசல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
* தண்ணீரின் உப்பு தன்மை, மாசுபடுதல் குறைகிறது.
* நிலத்தினுள் உப்பு நீர் உட்புகுவது தடுக்கப்படும்.
* மண் அரிப்பு தடுக்கப்படும்.


கோடையிலும் குடிநீர் பஞ்சம் இல்லை:""வடிகட்டிய மழைநீர் தான், எட்டாண்டுகளாக எங்களது உடம்பை பாதுகாத்து வரும் சத்தான குடிநீர்'' என்கிறார், மதுரை கூடல்நகரைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் டி.எஸ்.பி., ரவீந்திரன்.

மழைநீர் சேகரிப்பு திட்டம் மூலம் வெற்றி கண்ட அவர் கூறியதாவது:நான் திருவாரூரில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, பொதுப்பணித் துறை பொறியாளர் வரதராஜன் அறிமுகமானார். அவர் மூலம் திருவாரூரில் இருந்த வீட்டில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று, மதுரையில் வீடு கட்டினேன். எட்டாண்டுகளுக்கு முன், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நினைத்தேன். வரதராஜன் தான் மீண்டும் உதவினார். மூன்றாவது தளத்தில் மொட்டை மாடியில் வழிந்தோடும் தண்ணீரை சேகரிக்க, தனியாக "ஷெட்' அமைத்தேன். மொட்டை மாடியிலேயே தனியாக வடிகட்டும் தொட்டி அமைத்தேன். மணல், ஜல்லி, கரித்துகள்களை வடிகட்டியாக பயன்படுத்தி, அங்கிருந்து வடிகட்டிய நீரை தனியாக நான்கு தொட்டிகளில் சேகரிக்கிறேன். மொட்டை மாடியிலோ, பரணிலோ தொட்டி அமைக்க வசதியில்லை. எனவே, வீட்டின் கீழ்த்தளத்தில் "டைனிங் ஹால்' அறையில், தொட்டி அமைத்தேன். இந்த தொட்டி சென்னையில் தான் கிடைக்கிறது. ஒவ்வொன்றும் ரூ.3000 வீதம், நான்கு தொட்டிகள் இருக்கின்றன. சேகரமாகும் மழைநீர் கீழ்த்தொட்டி, மேல்தொட்டி என சேகரிக்கப்படுகிறது. தொட்டி நிரம்பினால் வெளியேறும் உபரிநீர், ஆழ்துளை கிணறைச் சுற்றியுள்ள இடத்தில் சேகரமாகிறது. இந்தத் தண்ணீரை குடிப்பதற்கு தனியாக தொட்டிகளில் சேகரிக்கிறேன். குடிப்பதற்கு இதை மட்டுமே பயன்படுத்துகிறோம். வடிகட்டுவதோடு சரி, காய்ச்சுவதில்லை. ஆனாலும் "மினரல் வாட்டர்' போல, ருசியாக இருக்கிறது.அதிகமாக மழை பெய்யும் காலங்களில் மொட்டைமாடியில் இன்னுமொரு பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீரை சேகரிக்கிறேன். இதை செடிகளுக்கு ஊற்றினால் நன்கு வளர்கின்றன. குடிநீரை எவ்வளவு மாதங்கள் வைத்திருந்தாலும் கெடாது. சுவையும் மாறாது. ஒருநாளில் ஒருமணி நேரம் மழை பெய்தால், மூன்று மாதங்கள் வரை தாங்கும்.எனக்குத் தெரிந்தவர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன் என்றார். போன்:83000 35011.

மதுரையில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்!மழையின்மை, ஒவ்வொரு வீட்டிலும், நீருக்காக 600 அடி வரை அமைக்கப்படும் ஆழ்குழாய்கள் போன்ற காரணங்களால், பல இடங்களில் ஆழ்துளை அமைத்தால் தண்ணீருக்கு பதில் "காற்று' மட்டுமே வருகிறது. மதுரையில், பல ஆண்டுகளாக ஆழ்துளை பணியில் ஈடுபட்டுள்ள கண்ணன் கூறியதாவது:ஐந்தாண்டுகளுக்கு முன், 60 அடி வரை ஆழ்துளையிட்டாலே போதும், தண்ணீர் பீறிட்டு அடிக்கும். இப்போது, நகரில் பரவலாக 200 அடி வரை துளையிட வேண்டியுள்ளது. அப்படி அமைத்தாலும், சில இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. குறிப்பாக, வில்லாபுரம், பெருங்குடி, அவனியாபுரம் பகுதியில், கெட்டி மண்ணாக இருப்பதால், தண்ணீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. அதேசமயம், பொட்டப்பாளையம், சாமநத்தம் பகுதிகளில் 60 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. மண்ணின் தன்மையை பொறுத்து, தண்ணீர் கிடைக்கும் ஆழத்தின் அளவுகள் மாறுபடுகின்றன, என்றார்.

850 அடி போட்டும் தண்ணீர் இல்லை! வேணுகோபால், வர்த்தகர், அய்யர்பங்களா: இந்த ஏரியா ஒரு காலத்தில் விளைநிலங்களாக இருந்தவை. 12 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கிறேன். ஏற்கனவே போடப்பட்ட 200 அடி போர்வெல்லில் இருந்து ஓரளவு தண்ணீர் கிடைத்து வந்தது. மழையில்லாததால், நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர் இல்லை. இதனால் சற்று தள்ளி, சில மாதங்களுக்கு முன் 400 அடிக்கு போர் போட்டும், தண்ணீர் வரவில்லை. எதிர்பிளாட்காரர் 850 அடி வரை போர் போட்டும், தண்ணீர் வரவில்லை. இந்நிலை நீடித்தால், கிராமங்களுக்கு செல்வதை தவிர வேறுவழியில்லை. நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை ரூ.500க்கு லாரி தண்ணீரை வாங்கி, தொட்டியில் ஏற்றி வருகிறேன். கண்மாய், நீர்வரத்துகால்வாய்களை காக்க தவறியதால், இந்நிலை.

மாதம் ரூ.500 பட்ஜெட் : *ஆர்.உஷாராணி, குடும்பத்தலைவி, மதுரை:ஏழுபேர் உள்ள எங்கள் குடும்பத்திற்கு மாதத்திற்கு 12 கேன் "மினரல் வாட்டர்' தேவைப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் 15 கேன்கள் வாங்குகிறோம். ஒரு கேனுக்கு ரூ.35 வீதம் மாதம் ரூ.500க்கு பட்ஜெட் ஒதுக்குகிறோம். மாநகராட்சி குடிநீர் கிடைத்தாலும் அதை சுடவைக்க வேண்டும். அதற்காகும் "காஸ்' செலவை ஒப்பிடும் போது, "மினரல் வாட்டர்' வாங்கி விடலாம்.
  பதிவிட்ட 27-5-2013 தேதியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றி


Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக