வெள்ளி, 27 ஜூன், 2014

வாழ்க்கை தோன்றிய விதம்?????

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                           
                 பூமியின் வாயுமண்டலம் இப்படி, அப்படி இருந்தது, அதனால் சக்தி இப்படிச் செயல்பட்டது. உயிர் வாழ்வு உருவானது என்றெல்லாம் கூறுவதை எப்படி விஞ்ஞான பூர்வமாகச் சரிபார்ப்பது ?
         
                   கால இயந்திரம் இருந்தால் மூன்றரை பில்லியன் (ஆயிரம் கோடி) ஆண்டுகள் பின் சென்று பார்க்கலாம் ஹெரால்ட் சி.ஊரே (Harold C.urey 1893 - 1981) என்ற அமெரிக்க வேதியியல் அறிஞர், ஆதிகாலப் பூமியின் வேதியியல் பண்புகள், உயிர் வாழ்வின் தோற்றம் இவற்றில் நாட்டம் காட்டினார்.         
                            
                   ஆதிகாலப் பூமியில் முதல் உயிர்வாழ்வு துவங்கிய போது இருந்த சூழ்நிலையை (Conditions) பரிசோதனைச் சாலையில் உண்டாக்க முடியுமா என்று யோசித்தார். அது முடிந்தால் என்ன நடந்திருக்கும் என்று கண்டுபிடிக்கலாம். ஸ்டான்லி L.மில்லர் (1930 - 2007) ஊரே யின் மாணவர் 1952 ல் ஊரே அவரை ஒரு சோதனை செய்யச் சொன்னார். 
                        
                      மில்லர் சுத்தமான தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் எந்த விதமான உயிரும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். பின்னர் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன் ஆகிய வாயுக் கலவையை அதில் சேர்த்து ஆதிகாலப் பூமியின் சூழ்நிலையை உண்டாக்கினார். இந்தக் கலவையை (தண்ணீரும், வாயுக்களும்) தன்னுடைய உபகரணத்தில் சுற்ற வைத்தார். ஓரிடத்தில் அதில் மின்சாரம் பாய வைத்தார். மின்னலிலிருந்து வெளிப்படுவதைப்போன்ற சக்தியாக மின்சாரத்தை பயன்படுத்தினார்.ஒருவாரம் இந்தக் கருவி இப்படிச் செயல்பட்டது. வார முடிவில் தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாகியிருந்தது. 

                 அப்போது அவர் கருவியைத் திறந்து உள்ளிருந்ததை கவனமாக ஆராய்ந்தார். உயிர்ப்பொருட்கள் அதில் இல்லை. ஆனால் அவர் முதலில் சோதனை ஆரம்பித்த போது இருந்ததை விட வேறு விதமான, வளர்ந்த மாலிக்யூல்கள் இருந்தன.

                    மீத்தேன் வாயுவின் ஆறில் ஒரு பங்கு நிறைய சிக்கலான மாலிக்யூல்கள் ஆகி இருந்தது. மின்சாரம் பாய்ந்த சக்தி மீத்தேன் வாயுவை மேல் நோக்கிச் செலுத்தியது, புரோட்டீனில் காணப்பெறும் இரண்டு எளிய அமினோ அமிலங்கள் இருந்தன. ஒரு சிறு குடுவையில், ஒரு வாரத்தில் இரண்டு அமினோ அமிலங்கள் உருவாக முடியுமானால், கடலில் ஆயிரம் கோடி வருஷங்களில் எவ்வளவு நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் ? 
                மில்லரைத் தொடர்ந்து வேறு விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். பிலிப் K. ஏபல்ஸன் (1913 - 2004) என்ற அமெரிக்க வேதியியல் அறிஞர், எளிய கூட்டுப் பொருள்களினால் பல விதமான கலவைகளைச் சோதித்தார். கலவை எதுவாக இருந்தாலும் சரி, கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் அணுக்கள் உள்ளவரை, சோதனையில் அமினோ அமிலங்கள் கிடைக்கும். 
                              
                   1959 ல் வில்ஹெல்ம் க்ராத், H. வான் வேஸென்ஹாஃப் என்ற இரண்டு ஜெர்மானிய வேதியியல் அறிஞர்கள் மின்சாரம் பாய்ச்சுவதற்கு பதிலாக அல்ட்ரா வயலட் கதிர்களை சக்தியாகப் பயன்படுத்தினார்கள். அப்போதும் அமினோ அமிலங்கள் உண்டாயின. 

        இன்னும் நிறைய அளவும், அதிக காலமும் கொண்டு வேதியியல் அறிஞர்கள் பரிசோதனைகளை நிகழ்த்தினால் இன்னும் சிக்கலான அணுக்கள் கிடைக்குமா ? 
                 ஆம். உருவான கூட்டுப் பொருட்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு புதிய பரிசோதனை செய்தனர். 1961 ல் ஹ்வான் ஓரோ என்ற ஸ்பானிஷ் அமெரிக்கன் வேதியியல் நிபுணர் ஹைட்ரஜன் சயனைடை ஒரு ஹைட்ரஜன் அணு + ஒரு கார்பன் + ஒரு நைட்ரஜன் ஆரம்பக் கலவையில் சேர்த்தார்.
மில்லரின் ஆரம்ப சோதனையில் ஹைட்ரஜன் சயனைடு உருவாகியிருந்தது. இப்போது இன்னும் அதிகமாக அமினோ அமிலங்கள் கிடைத்தன. சில அமினோ அமிலங்கள் இணைந்து கொண்டு சிறு சங்கிலிகள் ஆயின. ஓரோ ப்யூரைன்கள் என்ற மாலிக்யூலை அறிந்தார். ப்யூரைன்கள் நியூக்ளோடைடுகளின் ஒரு பகுதி, இவையே நியூக்ளிக் அமிலங்கள் ஆகின்றன. 

                 1962 ல் ஓரோ ஃபார்மல் டிஹைடை (ஒரு கார்பன் அணு + இரண்டு ஹைட்ரஜன் அணு + ஒரு ஆக்ஸிஜன் அணு) ஆரம்பக் கலவையில் சேர்த்தார். நியூக்ளோடைடின் பகுதியாக சர்க்கரை மாலிக்யூல்கள் கிட்டின. 

             1963 ல் இலங்கை அமெரிக்க வேதியியல் அறிஞர் ஸிரில் பொன்னம் பெருமா (1923 - 1994) ஏற்கெனவே சோதனைகளில் உருவான பல பொருட்களுடன் ஃபாஸ்பரஸ் சேர்ந்த கூட்டுப் பொருளைச் சேர்த்தார். முழுதாக நியூக்ளோடைடுகளும், சங்கிலி நியூக்ளோடைடுகளும் அமைப்பதில் வெற்றிகண்டார். 

                   ஸ்ட்னி.W.ஃபாக்ஸ் என்ற அமெரிக்க வேதியியல் அறிஞர் வேறு வழியில் ஆராய்ந்தார். 1958 ல் அமினோ அமிலங்களும் தொடங்கி, தண்ணீருக்குப் பதிலாக வெப்பத்தைப் பயன்படுத்தினார். அமினோ அமிலங்கள், புரோட்டீன் போன்ற மாலிக்யூல்களாக சங்கிலிக் கோர்வையுடன் உருவாயின. அவைகளை வெந்நீரில் கரைத்தபோது அவை சிறு செல் கோளங்களாக (உருண்டைகளாக) ஒட்டிக்கொண்டு நின்றன.

              மில்லரின் முதல் சோதனைக்குப் பிறகு செய்த எல்லாச் சோதனைகளும் ஏற்பட்ட மாற்றங்கள் உயிர்வாழ்வினை சுட்டிக் காட்டின, அப்போது உருவான வேதிப் பொருட்கள் உயிருள்ள பொருட்களில் இருப்பன போன்று இருந்தன.
                        பூமியின் உயிர்வாழ்வு தோன்றியது விந்தை அல்ல. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆரம்பிக்கும் போது தந்த வேதியியல் பொருட்களும் சக்தியும், உயிர் வாழ்வின் திசையிலேயே சோதனையை எடுத்துச் செல்லும் கொஞ்சம் வாய்ப்பு இருந்தாலும் எந்தக் கிரகத்திலும் உயிர்வாழ்தல் இருக்கும் என்று நாம் சொல்லலாம். ஒருவேளை வேறு உலகத்தில் உயிர்களைக் காண நேரிடலாம் ! 

   நாம் தெரிந்துகொண்ட அல்லது செல்லகூடிய கோள்கள் எல்லாம் நம் பூமியிலிருந்து மிகவும் வேறுபட்டவை. உயிர் வாழ்வு இருக்க வாய்ப்பே இல்லை. சந்திரனில் காற்றும், தண்ணீரும் இல்லை. மெர்க்குரியும், வீனஸும் மிக அதிக உஷ்ணமான இடங்கள். மார்ஸிக்கு அப்பாலுள்ள கிரகங்கள் மிகவும் குளிர்ந்தவை அவற்றின் வேதியியல் பூமியை விட மிகவும் வேறுபட்டது. எல்லாவற்றிலும் மார்ஸ்(செவ்வாய்) உயிர்வாழ்வுக்கு ஏற்றது போல் தோன்றும் அங்கே காற்று இலேசானது, மிகக் கொஞ்சம் தண்ணீரும், மிக அதிகக் குளிரும் உள்ள கிரகம் ஒருவேளை எளிய உயிரினங்கள் அங்கு இருக்கலாம் அல்லது உயிர் வாழ்விற்குத் தேவையான வேதியியல் பொருட்கள், அமினோ அமிலங்கள் அங்கு இருக்கலாம்

            1976 ல் ராக்கெட்டால் செலுத்தப்பட்ட இரண்டு விண்கலங்கள் மார்ஸை அடைந்தன. அதன் பரப்பில் இறக்கி, மண்ணைச் சோதனை செய்தன. கார்பன் அணுக்கள் உள்ள மாலிக்யூல்களின் அறிகுறிகள் இல்லை அத்தகைய மாலிக்யூல்கள் இல்லாமல் நமது பூமியைப் போன்ற உயிர்வாழ்வு உண்டாக முடியாது.
மற்ற கோள்களைப் பற்றி நமக்கு சில விஷயம் தெரிய வேறு வழி உண்டு. வெளி வானிலிருந்து நம் பூமி மேல் விழும் விண்கற்கள். அநேகமாக விண்கற்கள் உலோகம் சம்பந்தப்பட்டோ, பாறையாகவோ உள்ளன. எப்போதாவது, அபூர்வமாக, கொஞ்சம் தண்ணீரும் கார்பன் கூட்டுப் பொருளும் உள்ள விண்கற்கள் வரும்.

               1969 ல் ஒரு விண்கல் ஆஸ்திரேலியாவில் விழுந்தது. நிறைய பவுண்டுகள் எடையுள்ள பாறைச் சிதறல்கள் எடுக்கப்பட்டன. அவைகளை பொன்னம் பெருமா உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். விண்கற்களில் இருந்த சோதனை இயற்கைப் பொருள் பதினெட்டு விதமான அமினோ அமிலங்களை கொண்டிருந்தது, அவற்றில் ஆறு அமினோ அமிலங்கள் உயிருள்ள பொருட்களின் புரோட்டீனில் வருவன. விண்கற்களில் உயிருள்ள பொருள் ஏதாவது இருந்தது என்று இதற்குப் பொருளல்ல அப்படி ஒன்றும் இல்லை, இந்த பொருட்கள் உயிர்வாழ்வின் துவக்கம் என்ற நிலைக்குப் போகும் வழியில் இருப்பன. வேதியியல் மாற்றங்கள் உயிர்வாழ்வின் ஆரம்பம் நோக்கிப் போதல், சோதனைகளில் மட்டுமல்ல. மனித ஊடுருவலோ அல்லது திசைகாட்டலோ இல்லாத விண்கற்களிலும் இது நடக்கிறது இன்னுமொரு இடத்தில் கூட இத்தகைய விளைவுகள் உண்டு. பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களுக்கு நடுவே காணப்பெறும் மிகப் பெரிய தூசி, வாயு மேகங்கள் இடத்திலும் இந்த விளைவுகள் உண்டு.

             இத்தகைய தூசி, வாயு மேகங்கள் (சூரியபிரபஞ்சம் உருவாகக் காரணமானவை போன்றவை) அநேக ட்ரில்லியன் மைல்கள் தாண்டி உள்ளன. என்றாலும் அவைகளை அவைகள் அனுப்புகிற ரேடியோ அலைகள் மூலம் ஆராயலாம் ஒவ்வொரு பொருளும் ரேடியோ அலைகளை அனுப்புகிறது. ஒவ்வொரு வேறுவிதமான மாலிக்யூலும், வேறு வகையான ரேடியோ அலைகளை அனுப்பும். ஒவ்வொரு மாலிக்யூலுக்கும் அதனுடைய ரேடியோ “கைரேகை” உண்டு. 

                     1960 ல் பின்பகுதியில் மனிதர்கள் ‘ரேடியோ டெலஸ்கோப்புக்களை’ உருவாக்கி இத்தகைய மெல்லிய ரேடியோ அலைகளை சரியாக ஆராயும் உத்தியைக் கண்டார்கள்.

                     1968 ல் தண்ணீர், அம்மோனியா ஆகியவற்றின் ‘ரேடியோ அலை-கைரேகையைக் கண்டு பிடித்தார்கள் 1969 ல் முதன் முதலாய், கார்பன் உள்ள கூட்டுப் பொருள் – ஃபார்மால்டிஹைடு (Formaldehyde) கண்டு பிடிக்கப்பட்டது. 

                    1970 ல் நிறைய கூட்டுப் பொருட்கள், சிக்கல் நிறைந்து காணப்பட்டன. அவை எல்லாம் கார்பன் கலந்த பொருட்கள். அவற்றுள் சில, ஒன்றில் ஏழு அல்லது எட்டு அணுக்களுடன் இருந்தன.

                     ஃப்ரெட்ஹாயில் (1915 - ) என்ற ஆங்கில வானவியல் அறிஞர், அந்த மேகங்களில் சிறு அளவில் புரோட்டீன்களும், நியூக்ளிக் அமிலங்களும் இருக்கும் என்று கருதினார், அவைகள் நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிறியவை, ஆனால் உயிர்வாழ்தலைக் குறித்தன. ஒருவேளை அங்கு தான் உயிர்வாழ்வு ஆரம்பித்திருக்குமா?. அங்கிருந்து தான் பூமிக்கு வந்திருக்குமா?  என்று சொல்லமுடியாது .

                  ஆனால் விஞ்ஞானிகள் வாழ்வு எங்கு/எப்படி ஆரம்பித்தது என்று கண்டுபிடிக்கும் முயற்சிகளின் முதல் கட்டத்தில் இருக்கிறார்கள். எவ்வளவு காலங்கள் முன்னர் இது நடந்திருக்க வேண்டும், எவ்வளவு மெல்லிய தடயங்கள் உள்ளன என்பதை நினைக்கும் போது அவர்கள் எப்படி இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளனர் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.
எதிர்க்காலத்தில் அவர்கள் இன்னும் நிறைய சாதிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக