திங்கள், 25 மே, 2015

லாசிக் லேசர் கண் சிகிச்சை

         மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம். லாசிக் லேசர் சிகிச்சை பற்றி பார்ப்போம். கிட்டப் பார்வை, தூரப் பார்வை எந்த வயதிலும் வரலாம். சிறு வயதில் கண்ணாடி அணியும்போது, அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், டீன் ஏஜில், கண்ணாடி அணிவதைப் பெரும்பாலானவர்கள் விரும்புவது இல்லை. லென்ஸ் அணியலாம் என்றாலும், அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததுதான் லாசிக் லேசர் சிகிச்சை.
நாம் பார்க்கும் பொருளின் ஒளியானது, கண்ணில் கருவிழி (கார்னியா), லென்ஸ் தாண்டி விழித்திரையில் (ரெட்டினா) விழ வேண்டும். ஒளி சரியாக விழித்திரையில் படும்போதுதான், நம்மால் அந்தப் பொருளைப் பார்க்க முடியும். அதுவே, விழித்திரைக்கு முன்னதாகவோ அல்லது அதைத் தாண்டியோ விழுந்தால், அந்தப் பொருளை நம்மால் சரியாகப் பார்க்க முடியாது. அந்தப் பொருள் மங்கலாகத் தெரியும். லாசிக் லேசர் சிகிச்சை மூலம் கருவிழியின் அமைப்பு சரி செய்யப்பட்டு, கண்ணின் பவர் பிரச்னை சாி செய்யப்படுகிறது.
நம் கண் கருவிழியின் முன்பு, தெளிவான கண்ணாடி போன்று முகப்பு உள்ளது. இதன் தடிமன் 500 மைக்ரான் (அரை மி.மீட்டர்). இதில், 100 மைக்ரோ மீட்டர் ஆழத்துக்கு வட்ட வடிவத்தில் (முழுவதும் வெட்டாமல் சில மில்லி மீட்டர்கள் விட்டு) லேசர்கொண்டு வெட்டப்பட்டு மடிக்கப்படும். இதை ஃபிளாப் என்போம். அதன்பிறகு, அந்தப் பரப்பில் லேசர் செலுத்தப்பட்டு, கருவிழியின் அளவு மறுவடிவமைப்பு செய்யப்படும். பிறகு, மடிக்கப்பட்ட பகுதியைச் சரியாகக் கண்ணின் மேற்பரப்பில்வைத்ததும், அது தானாகப் பொருத்திக்கொள்ளும்.
முதன் முதலில் லாசிக் சிகிச்சை வந்தபோது, கண்ணின் மேல் பகுதியை பிளேடால் அறுவைசிகிச்சை செய்து திறக்கப்படும். அதன்பிறகு, லேசர் ஒளி செலுத்தப்பட்டு, கருவிழியின் தடிமன் குறைக்கப்படும். பிளேடு பயன்படுத்துவதற்கு பதில் லேசரைக்கொண்டே கண்ணின் மேல்பகுதி வெட்டப்படும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று வரை இந்தச் சிகிச்சைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
இந்தச் சிகிச்சை மிகவும் துல்லியமானது. மிகவும் பலன் அளிக்கக்கூடியதுதான். ஆனால், இந்தச் சிகிச்சை செய்ய, கண்ணின் மேல்பகுதி வெட்டப்பட்டு, ஒட்டப்படுவதால் நரம்புகள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட நரம்புகள் மீண்டும் வளர்ச்சியடையும் என்றாலும், அதுவரை கண்ணில், கண்ணீர் சுரத்தலில் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருந்தது. இதனால், கண் உலர்தல், எரிச்சல் போன்ற பிரச்னை ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, செயற்கைக் கண்ணீர்த் துளிகள் பயன்படுத்த வேண்டி இருந்தது. மேலும், மிகவும் அழுத்தமாக கண்ணைக் கசக்கும்போது, அந்த ஃபிளாப் நகர்ந்துவிட வாய்ப்பு உண்டு. அப்படி நகர்ந்தால், அதைச் சரி செய்ய முடியும் என்றாலும், கண்ணை மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. சிகிச்சை முடிந்து ஒருநாள் வரை கண் உறுத்தல் பிரச்னை இருக்கும். இதற்கெல்லாம் தீர்வளிக்கும் வகையில், அறிமுகம் ஆகியிருக்கிறது சிறுதுளை அறுவைசிகிச்சை ‘ஸ்மைல்’ (Small Incision Lenticule Extaction). இந்தச் சிகிச்சை முறையில், நோயாளிக்கு எந்த அளவுக்கு கருவிழியின் தடிமனைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதன் அடிப்படையில் லேசர் பயன்படுத்தி, கருவிழியின் தடிமன் குறைக்கப்படுகிறது. கண்ணின் மேல்பகுதி வழியாகவே இந்த லேசர் செலுத்தப்பட்டு கருவிழியின் தடிமன் வடிவமைக்கப்படுகிறது. இதன்பிறகு, கண்ணின் பக்கவாட்டில் சிறிய துளையிடப்பட்டு, அதன் வழியாகத் தடிமன் குறைக்கப்பட்ட கருவிழியின் திசுக்கள் வெளியே எடுக்கப்படுகின்றன.
இதனால், கண்ணில் பெரிய காயம் ஏற்படுத்தப்படுவது இல்லை. நரம்புகள் பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது. கண் உலர்தல், எரிச்சல் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே பார்வைத்திறன் நன்றாக இருக்கும். இரண்டு கண்களுக்கும் சேர்த்து 15 நிமிடங்களுக்கு உள்ளாக இந்த சிகிச்சையை முடித்துவிட முடியும். கோல்ட் லேசர் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுவதால், கண்ணில் வலியும் இருக்காது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் பலன் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக