செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள் வாழ்க்கை வரலாறு



மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். காந்தியவாதி சசிபெருமாள் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம். 



             மறைந்த காந்தியவாதி சசிபெருமாளின்(வயது59) சொந்த ஊர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை அருகே உள்ள இ.மேட்டுக்காடு கிராமம் ஆகும். இவர் 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி கந்தசாமி-பழனியம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார். இவரது முதல் மனைவி சசிகலா பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு விவேக் (வயது 40), நவநீதன் (38) என்ற 2 மகன்கள் உள்ளனர். 2-வது மனைவி பெயர் மகிளம் (45). இவருக்கு கவியரசி (11) என்ற மகள் உள்ளாள்.

இவர்களில் விவேக் சேலம் இரும்பாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நவநீதன் தறித்தொழிலாளி ஆவார். இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மகள் கவியரசி 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இருந்தபோதும், மேற்கொண்டு படித்து மரபுவழி மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார். அதன்மூலம் கிராம மக்களுக்கு யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்தார்.

மகாத்மா காந்தி மீது அளவுகடந்த பற்று கொண்டிருந்த இவர் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் தனது 16 வயதிலேயே பூரண மதுவிலக்குக்கோரி, கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். காந்திய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட இவர் கிராமங்கள்தோறும் சென்று அடிப்படை வசதிகளை மேற்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். பின்னர் ‘சுதந்திர தேசம்’ என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தினார். போதிய நிதி வசதி இல்லாததால் அவரால் அந்த பள்ளியை மேற்கொண்டு நடத்த முடியவில்லை.

சசிபெருமாள், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற தனது பிரதான கோரிக்கையை முன்நிறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது போராட்டம் தீவிரம் அடைந்தது. இதற்காக அவர் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறி வந்தார்.

உண்ணாவிரதம், நடைபயணம், ஆர்ப்பாட்டம் என்று மதுவிலக்குக்காக தனி ஒரு மனிதராக நின்று இவர் தனது போராட்டங்களை தொடர்ந்தார். இதன் உச்சமாக பொதுமக்களின் காலில் விழுந்து மது குடிக்க வேண்டாம் என்றும், மதுவிலக்கை அமல்படுத்த உதவுமாறும் கேட்டுக்கொண்டார். எப்படியாவது மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த சசிபெருமாள் தற்போது நம்மிடம் இல்லை. மதுவிலக்கு போராட்ட களத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி; மாலை மலர் 01.08.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக