புதன், 9 செப்டம்பர், 2015

மூலிகைக் குடிநீர்

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.

ஆரோக்கிய வாழ்விற்கு மூலிகைக் குடிநீர்
இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.
வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.
அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.
ஆவாரம்பூ குடிநீர்
--------------------------
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”
என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
‪#‎துளசி‬ குடிநீர்
-------------------
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
‪#‎வல்லாரை‬ குடிநீர்
-------------------------
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.
இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.
இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
‪#‎கரிசாலை‬ குடிநீர்
------------------------
“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”
என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.
வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.
கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.
இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
‪#‎சீரகக்‬ குடிநீர்
------------------
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.
இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.
கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.
சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.
‪#‎மாம்பட்டைக்‬ குடிநீர்
------------------------------
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
‪#‎நெல்லிப்பட்டைக்‬ குடிநீர்
---------------------------------
நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.
இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
‪#‎ஆடாதோடைக்‬ குடிநீர்
------------------------------
ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,
சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.
வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.
சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஆணவம் அழிந்தது.....

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.
                    பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,"அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.

                அர்ச்சுணனோ       "மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? '' என்றார்.

                அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. "தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்....

      வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.
அப்போது அவர்," தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்!

             அர்ஜூணனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

  இதனால் வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது.
                   ஒன்றும் புரியாதவனாய்  அரச்சுணனும் தேரைவிட்டு  தள்ளி நின்றான்.

         வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர்,

          தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.

        "பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,'' என்றார் புன்முறுவலுடன்.

"தேர் ஏன் எரிந்தது?" அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.

"அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால்,

        அவை வலிமையற்றுக் கிடந்தன.தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்துஅனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.உண்மை இப்படி இருக்க,
              நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.

வெற்றி பெற்றதும்
  "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,''
  என்று அறிவுரை கூறினார்.

          தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !

சைனஸ் பிரச்சினைக்கு மருந்து.





மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். சளிப்பிரச்சினையா?

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்...
* ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.
* தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
* தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க் கோர்வை போன்றவை சரியாகும்.
* குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
* கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்.
இந்த இயற்கை முறைகளை பின்பற்றி சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்யலாம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள் வாழ்க்கை வரலாறு



மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். காந்தியவாதி சசிபெருமாள் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம். 



             மறைந்த காந்தியவாதி சசிபெருமாளின்(வயது59) சொந்த ஊர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை அருகே உள்ள இ.மேட்டுக்காடு கிராமம் ஆகும். இவர் 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி கந்தசாமி-பழனியம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார். இவரது முதல் மனைவி சசிகலா பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு விவேக் (வயது 40), நவநீதன் (38) என்ற 2 மகன்கள் உள்ளனர். 2-வது மனைவி பெயர் மகிளம் (45). இவருக்கு கவியரசி (11) என்ற மகள் உள்ளாள்.

இவர்களில் விவேக் சேலம் இரும்பாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நவநீதன் தறித்தொழிலாளி ஆவார். இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மகள் கவியரசி 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இருந்தபோதும், மேற்கொண்டு படித்து மரபுவழி மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார். அதன்மூலம் கிராம மக்களுக்கு யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்தார்.

மகாத்மா காந்தி மீது அளவுகடந்த பற்று கொண்டிருந்த இவர் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் தனது 16 வயதிலேயே பூரண மதுவிலக்குக்கோரி, கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். காந்திய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட இவர் கிராமங்கள்தோறும் சென்று அடிப்படை வசதிகளை மேற்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். பின்னர் ‘சுதந்திர தேசம்’ என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தினார். போதிய நிதி வசதி இல்லாததால் அவரால் அந்த பள்ளியை மேற்கொண்டு நடத்த முடியவில்லை.

சசிபெருமாள், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற தனது பிரதான கோரிக்கையை முன்நிறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது போராட்டம் தீவிரம் அடைந்தது. இதற்காக அவர் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறி வந்தார்.

உண்ணாவிரதம், நடைபயணம், ஆர்ப்பாட்டம் என்று மதுவிலக்குக்காக தனி ஒரு மனிதராக நின்று இவர் தனது போராட்டங்களை தொடர்ந்தார். இதன் உச்சமாக பொதுமக்களின் காலில் விழுந்து மது குடிக்க வேண்டாம் என்றும், மதுவிலக்கை அமல்படுத்த உதவுமாறும் கேட்டுக்கொண்டார். எப்படியாவது மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த சசிபெருமாள் தற்போது நம்மிடம் இல்லை. மதுவிலக்கு போராட்ட களத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி; மாலை மலர் 01.08.2015

திங்கள், 25 மே, 2015

லாசிக் லேசர் கண் சிகிச்சை

         மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம். லாசிக் லேசர் சிகிச்சை பற்றி பார்ப்போம். கிட்டப் பார்வை, தூரப் பார்வை எந்த வயதிலும் வரலாம். சிறு வயதில் கண்ணாடி அணியும்போது, அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், டீன் ஏஜில், கண்ணாடி அணிவதைப் பெரும்பாலானவர்கள் விரும்புவது இல்லை. லென்ஸ் அணியலாம் என்றாலும், அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததுதான் லாசிக் லேசர் சிகிச்சை.
நாம் பார்க்கும் பொருளின் ஒளியானது, கண்ணில் கருவிழி (கார்னியா), லென்ஸ் தாண்டி விழித்திரையில் (ரெட்டினா) விழ வேண்டும். ஒளி சரியாக விழித்திரையில் படும்போதுதான், நம்மால் அந்தப் பொருளைப் பார்க்க முடியும். அதுவே, விழித்திரைக்கு முன்னதாகவோ அல்லது அதைத் தாண்டியோ விழுந்தால், அந்தப் பொருளை நம்மால் சரியாகப் பார்க்க முடியாது. அந்தப் பொருள் மங்கலாகத் தெரியும். லாசிக் லேசர் சிகிச்சை மூலம் கருவிழியின் அமைப்பு சரி செய்யப்பட்டு, கண்ணின் பவர் பிரச்னை சாி செய்யப்படுகிறது.
நம் கண் கருவிழியின் முன்பு, தெளிவான கண்ணாடி போன்று முகப்பு உள்ளது. இதன் தடிமன் 500 மைக்ரான் (அரை மி.மீட்டர்). இதில், 100 மைக்ரோ மீட்டர் ஆழத்துக்கு வட்ட வடிவத்தில் (முழுவதும் வெட்டாமல் சில மில்லி மீட்டர்கள் விட்டு) லேசர்கொண்டு வெட்டப்பட்டு மடிக்கப்படும். இதை ஃபிளாப் என்போம். அதன்பிறகு, அந்தப் பரப்பில் லேசர் செலுத்தப்பட்டு, கருவிழியின் அளவு மறுவடிவமைப்பு செய்யப்படும். பிறகு, மடிக்கப்பட்ட பகுதியைச் சரியாகக் கண்ணின் மேற்பரப்பில்வைத்ததும், அது தானாகப் பொருத்திக்கொள்ளும்.
முதன் முதலில் லாசிக் சிகிச்சை வந்தபோது, கண்ணின் மேல் பகுதியை பிளேடால் அறுவைசிகிச்சை செய்து திறக்கப்படும். அதன்பிறகு, லேசர் ஒளி செலுத்தப்பட்டு, கருவிழியின் தடிமன் குறைக்கப்படும். பிளேடு பயன்படுத்துவதற்கு பதில் லேசரைக்கொண்டே கண்ணின் மேல்பகுதி வெட்டப்படும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று வரை இந்தச் சிகிச்சைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
இந்தச் சிகிச்சை மிகவும் துல்லியமானது. மிகவும் பலன் அளிக்கக்கூடியதுதான். ஆனால், இந்தச் சிகிச்சை செய்ய, கண்ணின் மேல்பகுதி வெட்டப்பட்டு, ஒட்டப்படுவதால் நரம்புகள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட நரம்புகள் மீண்டும் வளர்ச்சியடையும் என்றாலும், அதுவரை கண்ணில், கண்ணீர் சுரத்தலில் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருந்தது. இதனால், கண் உலர்தல், எரிச்சல் போன்ற பிரச்னை ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, செயற்கைக் கண்ணீர்த் துளிகள் பயன்படுத்த வேண்டி இருந்தது. மேலும், மிகவும் அழுத்தமாக கண்ணைக் கசக்கும்போது, அந்த ஃபிளாப் நகர்ந்துவிட வாய்ப்பு உண்டு. அப்படி நகர்ந்தால், அதைச் சரி செய்ய முடியும் என்றாலும், கண்ணை மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. சிகிச்சை முடிந்து ஒருநாள் வரை கண் உறுத்தல் பிரச்னை இருக்கும். இதற்கெல்லாம் தீர்வளிக்கும் வகையில், அறிமுகம் ஆகியிருக்கிறது சிறுதுளை அறுவைசிகிச்சை ‘ஸ்மைல்’ (Small Incision Lenticule Extaction). இந்தச் சிகிச்சை முறையில், நோயாளிக்கு எந்த அளவுக்கு கருவிழியின் தடிமனைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதன் அடிப்படையில் லேசர் பயன்படுத்தி, கருவிழியின் தடிமன் குறைக்கப்படுகிறது. கண்ணின் மேல்பகுதி வழியாகவே இந்த லேசர் செலுத்தப்பட்டு கருவிழியின் தடிமன் வடிவமைக்கப்படுகிறது. இதன்பிறகு, கண்ணின் பக்கவாட்டில் சிறிய துளையிடப்பட்டு, அதன் வழியாகத் தடிமன் குறைக்கப்பட்ட கருவிழியின் திசுக்கள் வெளியே எடுக்கப்படுகின்றன.
இதனால், கண்ணில் பெரிய காயம் ஏற்படுத்தப்படுவது இல்லை. நரம்புகள் பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது. கண் உலர்தல், எரிச்சல் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே பார்வைத்திறன் நன்றாக இருக்கும். இரண்டு கண்களுக்கும் சேர்த்து 15 நிமிடங்களுக்கு உள்ளாக இந்த சிகிச்சையை முடித்துவிட முடியும். கோல்ட் லேசர் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுவதால், கண்ணில் வலியும் இருக்காது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் பலன் பெறலாம்.

வாழை நீர் அருந்துங்க-சிறுநீரகக் கல் காணாமல் போகும்.



மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். இதோ சிறுநீரக கல் பிரச்சினைக்கு எளிய தீர்வு

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.!
சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.
பெ.முத்துகிருஷ்ணன் >>> http://goo.gl/jj18aM படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார். சிறுநீர் கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்து கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர்.
அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.
நோண்டி எடுக்கப்பட்ட வாழை >>> http://goo.gl/MweGCq
இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.
அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.
நீர் நிரம்பிய நிலையில் வாழை >>> http://goo.gl/fZtBlH
அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.
மேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார். விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை.
இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வியாழன், 14 மே, 2015

சிறுதானிய உணவுத் திருவிழா-

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி 

களை கட்டிய சிறுதானிய உணவுத் திருவிழா- கலப்பட உணவு வகைகளை களையெடுக்க உறுதி


  • மாப்பிள்ளை சம்பா கொழுக்கட்டை
    மாப்பிள்ளை சம்பா கொழுக்கட்டை
  • கேழ்வரகு லட்டு
    கேழ்வரகு லட்டு
  • குதிரைவாலி பிரியாணி
    குதிரைவாலி பிரியாணி
நாகரிகம் என்கிற பெயரில் உணவு வகைகளில், செயற்கை மற்றும் கலப் படங்கள் கலந்து துரித உணவு கலாச்சாரம் பெருகிவரும் கால கட்டம் இது.
இத்தகைய சூழலில் மக்களுக்கு புரதச் சத்துகள் நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை சமைத்துக் காட்டி விருந்து படைத்தது விருதுநகரில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா.
இயற்கை நலவாழ்வுச் சங்கம், விஎம்.ஞானசபாபதி - சரஸ்வதி சாரிட்டீஸ் டிரஸ்ட் இணைந்து நடத்திய சிறுதானிய உணவுத் திருவிழா விருதுநகரில் நடை பெற்றது. சிவகாசி இயற்கை வேளாண்மை நம்மாழ்வார் நல வாழ்வு மைய உணவியல் வல்லுநர் மாறன்ஜீ மற்றும் ஆ.சா.ரமேஷ், அமிர்தவள்ளி குழுவினர் கலந்துகொண்டு வழக்கத்தில் நாம் மறந்த சிறுதானிய உணவு வகைகளை சமைத்துக் காட்டினர்.
விழிப்புணர்வுத் திருவிழா
ஊட்டச்சத்துகளும் மருத்துவ நற்குணங்களும் நிறைந்த சிறுதானி யங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, கொள்ளு, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்றவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதுபோன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் சுவைமிகுந்த உணவுப் பொருள்களை மீட்டு ருவாக்கம் செய்து, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதும் இந்தத் திருவிழாவின் நோக்கம் என்று அவர்கள் தெரிவித் தனர்.
விழாவில் தினைப் பாயாசம், சாமை அரிசி, தயிர் சாதம், வரகரிசி புலாவ், கம்பு லட்டு, குதிரைவாலி பிரியாணி, மாப்பிள்ளை சம்பா கொழுக்கட்டை, கேழ்வரகுப் புட்டு, இரும்புச் சோளம் கஞ்சி, பனிவரகு, சாம்பார் சாதம் போன்றவை சமைக் கப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இச்சிறுதானிய உணவுகளில் சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய மாவுச் சத்துக்கள் இல்லாததால், அந்த நோய் வராமல் தடுப்ப தற்கும், சர்க்கரை நோயாளிகளுக் கும் சத்து நிறைந்த அவை சிறந்த உணவாக இருக்கும். சிறுதானியங்கள் உடல் ஆரோக் கியத்தைப் பேண உதவுவதாகவும், நோய் வந்தால் விரைவாக குணப்படுத்த உதவுவதாகவும் இயற்கை நலவாழ்வுச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் நெல் அரிசியைப் போலவே சிறுதானிய அரிசி, தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றைப் பயன்படுத்தி சாப்பாடு, தயிர்சாதம், நெய்சாதம், கூட்டாஞ்சோறு, எலுமிச்சை சாதம், இட்லி, தோசை, பொங்கல், புட்டு போன்றவை சமைக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
அதோடு, வரகு கறிவேப்பிலை சோறு, சாமை கூட்டாஞ்சோறு, கேழ்வரகு இட்லி, சுண்ணாம்புச் சத்து நிறைந்த கேழ்வரகு அல்வா, சாமை கார புட்டு, சாமை தட்டை, வரகு முறுக்கு, குறையாத நார்ச்சத்துக்கு வரகு அதிரசம், குழந்தைகள் ருசித்து உண்ணும் வகையில் கொள்ளு லட்டு தயாரிப்பு, கொழுப்பைக் குறைக்கும் கொள்ளுச்சாறு, சாமை கிச்சடி, உடலுக்கு வலுகொடுக்கும் குதிரைவாலி கேசரி, நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் சாமை மிளகுப் பொங்கல், தினை மாவு பாயாசம், சுவை நிறைந்த வரகுப் பொங்கல், ஜீரணசக்தியை அதிகரிக்கும் சாமை மசாலா முறுக்கு, குறுந்தானிய கட்லெட், குளிர்ச்சியூட்டும் கம்பு பணியாரம் தயாரிக்கும் வகைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
உணவுக் கட்டுப்பாடு
மேலும், கனிகளை முதல் உணவாகவும், அடுத்து காய்கறி களையும், பிறகு தானிய வகை களையும் உண்பது நல்லது என்றும், ஒருவேளைக்கு ஒருவகை உணவு மட்டும் உண்பதே மிகச்சிறந்தது என்றும் வந்திருந்தவர்களுக்கு அவர் கள் அறிவுறுத்தினர். அத்துடன், மனச்சிக்கலுக்குக் காரணம் மலச் சிக்கலே, மூட்டுவலிக்கு புற்றுமண் பட்டி போடுவோம், தினசரி இருமுறை குளிப்போம், மழைநீரை குடிநீர் ஆக்குவோம், மரம் வளர்ப்போம், மண்வளம் காப்போம், மாடிவீட்டுத் தோட்டம் அமைப்போம், காலை காபி அல்சரின் தொடக்கம், கனிகளை உண்க- பிணிகளை நீக்குக என்ற ஆரோக்கியமான வாழ்வுக்கான பொன்மொழிகளின் அர்த்தங்களையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
 
 

பாரம்பரிய உணவுகள்


மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம். நமது முன்னோர்கள் வழி நல்ல சோறு வகைகள் பற்றி காண்போம்.

  பாரம்பரிய சோறு-வகைகள்



 உணவு பட்டியல்- 1
கொள்ளு சாறு
தினை இனிப்பு பெ¡ங்கல்
சிறுதானிய இட்டவி
நிலக்கடலை துவையல்
வரகு - சாம்பார் சோறு
சாமை-தயிர் சோறு
சுரக்காய் கூட்டு

 உணவு பட்டியல்-  2
  வாழைத் தண்டு சாறு
தினை பாயசம்
வரகு- கருவேப்பிலைச் சோறு
சாமை- மிளகு சோறு
சிறுதானிய அடை
பீற்கன்காய் துவையல்
பூசனிக்காய் கூட்டு




உணவு பட்டியல்- 3
முடக்கத்தான் ரசம்
தேங்காய் தினை இனிப்பு
வரகு-எள்ளுசோறு
கூட்டாஞ் சோறு
சிறுதானிய பனியாரம்-காரம்
தேங்காய் துவையல்
கத்தரிக்காய் மசியல்

உணவு பட்டியல்- 4


தூதுவாளை ரசம்
தேனும் தினைமாவும்
வரகு- கருவேப்பிலைச் சோறு
சாமை-தயிர் சோறு
நவதானிய புட்டு
நாட்டுகாய்கறிகள் கூட்டு



 உணவு பட்டியல்- 5


பிரண்டை ரசம்
   தினை இனிப்பு பொங்கல்
வரகு- மல்லி சோறு
கூட்டாஞ் சோறு
சோளப் பனியாரம்-கரம்
நிலக்கடலை துவையல்
பரங்கிக்காய் ˜ட்டு
உணவு பட்டியல்-  6

கொள்ளு சாறு
சாமை பாயசம்
வரகு-நிலக்கடலை சோறு
சாமை-எள்ளு சோறு
கேழ்வரகு புட்டு
உப்பு பருப்பு



உணவு பட்டியல்- 7


வாழைத் தண்டு சாறு
தினை பாயசம்
மாப்பிள்ளை சம்பா சாம்பார் சோறு
வரகு-எள்ளுசோறு
கம்பு அடை
புளிச்சைக் கீரை துவையல்
கலவைக்காய் கூட்டு




மாலை - சிற்றுண்டி வகை
சூடான குடிப்பு வகை
Ø  சுக்கு தண்ணி
Ø  மல்லி தண்ணி
Ø  சுக்குமல்லி தண்ணி
Ø  இஞ்சி தண்ணி
Ø மூலிகை தண்ணி


சிறு உணவு வகை
Ø சிவப்பு அவல் பிரட்டல்
Ø வெள்ளை அவல் பிரட்டல்
Ø சிறுதானிய அவல் பிரட்டல்
Ø நவதானிய கொழுக்கட்டை
Ø இனிப்பு புட்டு
Ø கார புட்டு
Ø சுண்டல் வகைகள் (காராமணி,பாசிப்பயறு,நிலக்கடலை,கொண்டக்கடலை)
Ø நவதானிய அடை
Ø கீரை அடை
Ø நவதானிய உருண்டை
Ø தேனும் தினைமாவும்
Ø சிறுதானிய முறுக்கு
Ø சிறுதானிய அதிரசம்
Ø பால் கொழுக்கட்டை
Ø நெய் புட்டு
Ø கம்பு இனிப்பு
Ø சிறுதானிய பனியாரம்-கரம்
Ø சிறுதானிய பனியாரம்-இனிப்பு
Ø வெந்நையக்களி
Ø தேங்காய்பால் கஞ்சி
Ø எள்ளு மாவு

புதன், 13 மே, 2015

நோய் கணிப்பு முறைகள்

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம்.
 நோய் கணிப்பு முறைகள்:
ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.
நாடி எப்படி உண்டாகிறது?
நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான்.  அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.
நாடி பார்க்கும் முறை:
 மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்) ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும், தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
நாடி நிதானம்;
மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி, குரு நாடி என இரு நாடிகள் உண்டு. பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.

எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.
ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:
ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.

பத்துவகை நாடிகள்:
1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.
2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி
4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி
5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
10. குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.

நாடி பார்க்கும் மாதங்கள்:
சித்திரை, வைகாசி-காலை (உதயம்)
ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை -நண்பகல்
மார்கழி, தை , மாசி - மாலை
ஆவணி, புரட்டாசி, பங்குனி - இரவு
உடலுறவு கொண்டவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டியதால் களைப்படைந்தவர்கள், வயிறு நிறைய சாப்பிட்டவர்கள், மழையில் நனைந்தவர்கள், அடிக்கடி விக்கல் எடுப்பவர்கள், நாட்டியம் ஆடியவர்கள், மூச்சுப் பயிற்சி செய்தவர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், அதிகமாக கவலைப் படுபவர்கள், அதிகப் பசி உடையவர்கள், பூப்படையும் வயதில் உள்ள பெண்கள், அதிகமாகக் கோபப்படுவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், நோன்பு விரதம் இருப்பவர்கள் மற்றும் வேறு சிலருக்கும் தெளிவாக நாடி பார்க்க முடியாது.

நாடிகளின் தன்மை:

வாத நாடி
வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.
அறிகுறிகள்:
உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல் கொஞ்சமாகவும் வெளியாகும்.
பித்த நாடி
பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
அறிகுறிகள்:
உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.
சிலேத்தும நாடி:
சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும்,  உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.
உடல் அறிகுறிகள்:
உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.

மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:
தலையில்                     15000
கண்களில்                     4000
செவியில்                      3300
மூக்கில்                          3380
பிடரியில்                       6000
கண்டத்தில்                   5000
கைகளில்                       3000
முண்டத்தில்                 2170
இடையின் கீழ்              8000
விரல்களில்                   3000
லிங்கத்தில்                    7000
மூலத்தில்                       5000
சந்துகளில்                     2000
பாதத்தில்                        5150
மொத்தம்                       72000

நோய்களின் பட்டியல்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அகத்தியர் ரத்தின சுருக்கம் என்ற சித்த மருத்துவ நூலில் 62 வகை நோய்களின் அடிப்படையில், மனிதர்களுக்கு 4448 வகையான நோய்கள் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.
1. வாத நோய்                         84
2. பித்த நோய்                        42
3. சிலேத்தும நோய்            96
4. தனூர் வாயு                       300
5. கண் நோய்                        96
6. காச நோய்                          7
7. பெரு வயிறு                      8
8. சூலை நோய்                    200
9. பாண்டு                              10
10. சிலந்தி நோய்               60
11. குன்மம்                             8
12. சந்தி நோய்                    76
13. எழுவை (கழலை)
நோய்                                     95
14. சுர நோய்                        64
15. மகோதரம் நோய்          7
16. தலையில் வீக்கம்        5
17 உடம்பு வீக்கம்              16
18. பிளவை நோய்               8
19. படுவன்  நோய்             11
20. தொப்புள் நோய்              7
21. பீலி நோய்                         8
22. உறுவசியம்                      5
23. கரப்பான் நோய்              6
24. கெண்டை நோய்          10
25. குட்ட நோய்                    20
26. கதிர் வீச்சு நோய்             3
27. பல்-ஈறு நோய்                  6
28. சோகை                             16
29. இசிவு                                   6
30 மூர்ச்சை                             7
31. சூலை நோய்                  48
32. மூலம்                                9
33. அழல் நோய்                  10
34. பீனிசம்                             76
35. நஞ்சுக் கடி                      76
36. நாக்கு-பல் நோய்         76
37. கிரகணி நோய்              25
38. மாலைக் கண்                20
39. அதிசாரம்                         25
40. கட்டி                                  12
41. கிருமி நோய்                    6
42. மூட்டு நோய்                  30
43. முதிர்ந்த கீல் நோய்     20  
44. கக்கல் (வாந்தி) நோய்   5
45. கல் அடைப்பு                   80
46. வாயு நோய்                      90
47. திமிர்ப்பு நோய்                10
48. விப்புருதி                           18
49. மேக நீர்                              21
50. நீர் நோய்                              5
51. நஞ்சுவாகம்                    16
52. செவி நோய்                    10
53. விக்கல்                             10
54. அரோசிகம்                        5
55. மூக்கு நோய்                  10
56. கடிநஞ்சு                          500
57. காயம், குத்து வெட்டு 700
58. கிரந்தி                                 48
59. பறவை நஞ்சு நோய்   800
60. புறநீர்க் கோவை           200
61. உதடு நோய்                    100
62. பிள்ளை நோய்               100

ஞாயிறு, 3 மே, 2015

சித்த மருத்துவம்-01

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.சித்த மருத்துவம் பற்றி அறிந்துகொள்வோம்.

 
         சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.

புதன், 29 ஏப்ரல், 2015

அப்பக்கோவை கீரை

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.அப்பக்கோவை கீரை பற்றி தெரிந்துகொள்வோம்.
அப்பக்கோவை கீரை கொடிவகையை சார்ந்தது. அறியகோவை எனவும் அழைக்கப்படும் இக்கீரை ஈரப்ப்பசையுள்ள இடங்களில் செழித்து வளரும். வேலிகளில் படர்ந்து வளர்ந்திருக்கக் காணலாம். இதன் இலைகளை கசக்கினால் ஒருவித வாசனை வரும். இதன் பூக்கள் சிறிய மஞ்சள் நிறமானவை.
அப்பக்கோவையில் கல்சியம், பொஸ்பரசு, இரும்புச்சத்து, விட்டமின் C, விட்டமின் B ஆகியவை உள்ளன.
கோவை கீரைக்கு உரிய மருத்துவ குணங்கள் அனைத்தும் இக்கீரைக்கு உண்டு. சிறுவர்களுக்கு வரும் சளி இருமலை ஆற்றும் சக்தி வாய்ந்தது. குழந்தைகளுக்கு சளி இருமல் இருப்பின் அப்பகோவை சாற்றை பாலில் கலந்து சங்கில் ஊற்றிக் கொடுப்பார்கள். இயற்கை மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் அப்பகோவை கீரை ஒரு பயனுள்ள கீரை.
இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்
கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது.
கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், கிழங்கு அனைத்தும் மருத்துவப்பயன் கொண்டவை. மலர்கள் வெள்ளையாகவும் காய்கள் நீண்ட முட்டை வடிவ வரியுள்ளவையாகவும் பழங்கள் செந்நிறமாகவும் இருக்கும். வேர் கிழங்காக வளரும்
இரத்தம் சுத்தமடைய காற்று,நீர் இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவுகளாலும் (fast food) உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது.
மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது.
இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 கரண்டி அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
கண்நோய் குணமாக கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.
தோல் கிருமிகள் நீங்க தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.
கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
உடல் சூடு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.
கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்.
சர்க்கரை நோயை கோவைக்காய் கட்டுப்படுத்துகிறது
கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
முதல் ரக சர்க்கரைநோய் இளம் வயதிலும் வரலாம். முதிய வயதிலும் வரலாம். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் கட்டாயமுள்ளது. இரண்டாம் ரக நோயாளிகள் மாத்திரை சாப்பிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இது இளம் வயதில் வராது. உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.
இப்படிப்பட்ட சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வுக்குழு மருத்துவர்கள் கோவைக்காயை பொடியாக்கி சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 200-க்கும் குறைவாக உள்ள 30 புதிய சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும் ஒருகிராம் கொடுத்து வந்தனர். அந்த ஒரு கிராம் பொடி, கோவைக்காய் பச்சையாக 15 கிராம் சாப்பிடுவதற்கு சமம்.
இவ்வாறு 3 மாதம் நோயாளிகள் சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவைக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல் கோவைக் காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.
கோவைப்பழம்-thamil.co.uk
நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளும் விருப்பமுடையதாகத் தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப் புண் இருப்பவர்கள் வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்க கூடாது பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.
இதர மருத்துவ பயன்கள்
கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.
கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும். இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.
கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும்.
கோவையின் பச்சைக் காய் இரண்டை தினமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.
கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்றுவேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.
இயற்கை வாய்ப்புண் டானிக்
கோவைக்காய் , கோவை இலை மற்றும் கோவை பூ இவை அனைத்தையும் ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் எடுத்து அதில் தேவையான நீரை சேர்த்துக்கொள்ளவும் பிறகு அதை நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை வடிகட்டியால் வடிகட்டி நீரைமட்டும் எடுத்து சேகரித்து கொள்ளுங்கள். சுவைக்காக சிறிது தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். தேன் இல்லாதபட்சத்தில் சர்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இப்பொழுது வாய்ப்புண் டானிக் தயார். இதை சித்த வைத்தியத்தில் தீநீர் இறக்குவது என்று கூறுவார்கள்.
இந்த தீநீர் வயிற்றுப்புண் , வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக சிறந்த டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின் காரணமாக மருந்துகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம் வாய் வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட தீநீர் செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. கோவைக்காய் வெறும் பச்சையாகவே சாப்பிட்டாலேபோதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோவை காயை பச்சையாக சாப்பிடுவதா என்று எண்ணவேண்டாம். கோவைக்காய் பச்சையாக சாப்பிட்டால் அசல் வெள்ளரி பிஞ்சு சுவையுடையது.
தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய் 
கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.
இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.
வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு கஷாயம்,  மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.
இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்

அஸ்வகந்தா

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.அஸ்வகந்தா மூலிகை பற்றி தெரிந்துகொள்வோம்.

அஸ்வகந்தா.
1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.
2)தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.
3) தாவரக் குடும்பம் -: SOLANACEAE.
4) வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.
5) வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20
6) பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.
7)வளரியல்பு -: அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. அமெருக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட ஆப்பரிக்க மெடிட்டரேனியன் பகுதிகளிலும் இயற்கையாக வளரவல்ல இந்த மூலிகையின் மற்றொரு ரகமும் உண்டு அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள். முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிறித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.
8) மருத்துவப் பயன்கள் -: இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.
‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்
அசுவகந் திக்கென்றறி.’

சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.

முறை -: அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும். இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும். தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.