புதன், 29 ஏப்ரல், 2015

வேலிப்பருத்தி

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.வேலிப்பருத்தி பற்றி அறிந்து கொள்வோம்.

1) மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி. 2) தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA. 3) தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE 4) வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி. 5) பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன. 6) வளரியல்பு -: தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. 7) மருத்துவப்பயன்கள் -: இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.
இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.
நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.
கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.
இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.
காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.
இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.
இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.
இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.
இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.
5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.
உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.
தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.
'ஆலித் தெழுந்தநோ யத்தனையும் தீருமேவேலிப் பருத்தியதன் மெல்லிலையால்-வேலொத்துக்கண்டிக்கும் வாதஞ்சன்னி தோஷ மும்போமுண்டிக்கும் வாசனையா மோது'

'உத்தா மணியிலையா லும்வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.'

சிறியாநங்கை

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். சிறியாநங்கை மூலிகை பற்றி தெரிந்துகொள்வோம்.
1. தாவரப்பெயர் - ANDROGRAPHIS PANICULATA.

2. தாவரக்குடும்பம் -ACANTHACEAE.
3. வகை -பெரியா நங்கை என்றும் உள்ளது.
4. வளரும் தன்மை - செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம்கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும். 5. முக்கிய வேதியப் பொருட்கள் - ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.
6. பயன் தரும்பாகங்கள் - இலை மற்றும் வேர்ப் பகுதிகள்.
7. பயன்கள் - இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகள் மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள். நஞ்சுக் கடிக்கும் இதைப் பயன் படுத்துவார்கள். சிறியாநங்கை என்ற மூலிகை பெண் பெண்வசியத்தைச் செய்யும். வெங்காரத்தைப் பஸ்பமாக்கும். தேகத்தில் வனப்பை உண்டாக்கும். விசமுறிக்கும் மருந்தில் கூட்டு கூட்டு மருந்தாக செயல் படுகிறது. பெரியா நங்கை என்ற ஒரு வகையும் உண்டு.

கோரைப்புல்

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். கோரைப்புல் பற்றி அறிந்துகொள்வோம்.
      1. மூலிகையின் பெயர் -: கோரை.
2.தாவரப் பெயர் -: CYPERUS ROTUNDUS.

3. தாவரக் குடும்பப் பெயர் -: CYPERACEAE.

4.பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு.

5. வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass,
nut sedge, nut grass, purple nut sedge, red nut 
sedge முதலியன. இதில் சிறு கோரை, பெருங்கோரை 
என இரு வகையுண்டு.

6. வளரியல்பு -: கோரை ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது.
இதன் தாயகம் ஆப்பிரிக்கா, தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிறிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும். இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது. பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும். மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.

4.    மருத்துவப்பயன்கள் -: கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்.

கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம், உடற்பொலிவு உண்டாகும்.

கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்படாகம், பிரமட்டை, சுக்கு வகைக்கு 5 கிராம் சிதைத்து 500 மி.லி. நீரில் போட்டு 125 மி.லி.யாகக் காய்ச்சிக் காலை, மாலை கொடுத்து வரத் தாகத்துடன் கூடிய சுரம் நீங்கும்.

கிழங்கை குடிநீர் செய்து காச்சிய பாலில் சேர்த்து மோராக்கி அதில் உணவு கொள்ளக் குழந்தைகளுக்குக் காணும் பசியின்மை செரியாமை தீரும்.

இஞ்சியும் கோரைக் கிழங்கையும் நன்கு தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டக்காயளவு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

பச்சைக்கிழங்கை அரைத்து மார்பின் மீது பற்றுப்போட்டால் பச்ச உடம்புக்காரிக்குப் பால் சுரக்கும். தேள் கடி, குளவிக் கடி ஆகியவைகளுக்குப் பற்றிட்டால் குணமாகும். இதை உடல் மீது பூசினால் வியர்வை நாற்றம் வராது.

கோரைக் கிழங்கைப் பாலுடன் அரைத்துப் பசையாக்கி தலைக்குப் பூசினால் ஞாபகசக்தி கூடும். வலிப்பு நோய், காச்சல், பைத்தியம் குணமடையும். மேலும் இரத்தக்கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், சிறுநீர் தாரை சுத்தம் ஆகியவை குணமாகின்றது. கர்ப்பப் பையையும், மார்பகங்களையும் நன்கு வளர்ச்சியடையச் செய்கிறது. இதை 1-3 கிராம் பவுடராகவும், 10-70 மில்லிவரை கசாயமாகவும் குடிக்கலாம். குளந்தைகளுக்கும், பச்சை உடம்புக் காரிகளுக்கும் குடிக்கக்கொடுக்கக்கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி கொடுக்க வேண்டும்.

கோரைக்கிழங்குப் பவுடரை அரை தேக்கரண்டி வீதம் காலையும் இரவும் உணவுக்கு முன் நீர் அல்லது பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும்.

கோவைக் காய்

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.கோவை கொடி பற்றி தெரிந்துகொள்வோம்.


1. மூலிகையின் பெயர் :- கோவை.
2. தாவரப்பெயர் :- COCCINIA INDICA.
3. தாவரக் குடும்பம் :- CUCURBITACEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய் மற்றும் கிழங்கு.
5. வளரியல்பு :- கோவைக் கொடி நன்கு படர்ந்து வளரக் கூடிய கொடி இனத்தைச் சேர்ந்தது. இது சாதாரணமாக வேலிகளிலும், குத்துச்செடி, மரங்களிலும் படர்ந்து தமிழகமெங்கும் வளரக்கூடியது. இதன் இலைகள் ஐந்து கோணங்களையுடைய மடலான காம்புடையது. மலர்கள் வெள்ளையாகவும், நீண்ட முட்டை வடிவ வரியுள்ள காய்களையும், பழங்கள் செந்நிரமாக இருக்கும். பெண்களின் உதடுகளை இந்தப் பழத்திற்கு ஒப்பிடுவர் புலவர்கள். வேர் கிழங்காக வளரும்.
6. மருத்துவப்பயன்கள் :- கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.
கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும்.
இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.
கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும்.
கோவையின் பச்சைக் காய் இரண்டை தீனமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.
கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.
கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொறியல் செய்தும் சாப்பிடலாம்.

கானாவாழை

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.கானாவாழை பற்றி தெரிந்துகொள்வோம்.
 
1. மூலிகையின் பெயர் :- கானா வாழை.
2. தாவரப்பெயர் :- COMMELINA BENGALENSIS.
3. தாவரக் குடும்பம் :- COMMELINECEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- சமூலம்.
5. வளரியல்பு -: கானா வாழையின் பிறப்பிடம் ஆசியா, ஆப்பிரிக்கா. பின் சைனா, தாய்வான், ஜமாய்க்கா, அமரிக்கா, கலிபோர்னியா, பாக்கீஸ்தான், நேபால் இந்தியா போன்ற நாடுகளில் பரவிற்று. தமிழ்நாட்டில் ஈரமான இடங்கள் கடற்கரை அடுத்த நிலங்களில் தானாக வளரும் சிறு செடி. இது பயிர்களில் கழையாக வளரக்கூடியது. இதன் இலைகள் முட்டையாக ஈட்டி வடிவில் அமைந்திருக்கும். இலைகள் மென்மையாக பச்சையாக தண்ணீர் உள்ள சதைப்பற்றை உடையது. இது தரையோடு படர்ந்து மேல் நோக்கி வழரும் சிறு செடி. இதன் மலர்கள் நீல நிறமாக சிறிதாகக் காணப்படும். கீரையாகப் பருப்பு கலந்து கூட்டுக் கறியாகச் சமைத்துண்ணலாம். விதைமூலம் இனவிருத்தியாகிறது.
.6 மருத்துவப்பயன்கள் :- கானா வாழையை சீனா மக்கள் மூலிகையாகப் பயன்படுத்தினர். பாக்கீஸ்தானில் தோல் வியாதியால் ஏற்படும் வீக்கம் குறைக்கப் பயன் படுத்தினர், தொழுநோய் புண்களை சுத்தப் படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தினர். நேபாலில் உணவுக்குக் கீரையாகப் பயன்படுத்தினர். கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தினர். தீப்புண் குணமாகவும் இதைப் பயன்படுத்தினர்.
சமூலத்தைக் குடிநீராக்கிக் குடிக்க எளிய சுரம் போகும்.
சமூலத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து குடிநீராக்கிக் கொடுக்கத் தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் தாகமும் சுரமும் நீங்கும்.
சமூலத்துடன் அறுகம்புல் சமனாக மையாய் அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை, மாலை பாலில் கொடுக்க இரத்தப் பேதி நிற்கும்.
சமூலம், அசோகுப் பட்டை, அறுகு சமன் அரைத்துக் காலை மதியம், மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு தீரும்.
சமூலம், தூதுவேளைப் பூ, முருங்கைப் பூ ஒரு குவளை நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ளத் தாது பலப்படும்.
இலையுடன் சம அளவு கீழாநெல்லி மையாய் அரைத்துத் தயிரில் நெல்லிக் காயளவு காலை, மதியம், மாலை கொடுக்க வெள்ளைப் போக்கு தீரும்.
இலையை அரைத்துக் கட்டினால் படுக்கைப் புண், மார்புக் காம்பைச் சுற்றி வரும் புண்கள் தீரும்.
இலையைக் கசக்கி முகப்பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும்.

காட்டாமணக்கு

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.காட்டாமணக்கு பற்றி தெரிந்துகொள்வோம்.

1. மூலிகையின் பெயர் -: காட்டாமணக்கு.

2. தாவரப்பெயர் -: JATROPHA CURCAS.
3. தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE 

.4. பயன்தரும் பாகங்கள் -: இலை,பால், பட்டை, எண்ணெய் ஆகியவை.
5. வேறுபெயர்கள் -: ஆதாளை, எலியாமணக்கு ஆகியவை.
6. வகைகள் -: ஜெட்ரோபா சிளான்டிலிட்டரா, ஜெ.காசிப்பிட்டோலியா, ஜெ.பட்டாரிக்கா போன்றவை.
7. வளரியல்பு -: காட்டாமணக்கு சுமார் 5 மீட்டர் உயரம் வரை வளர்க்கூடிய சிறிய மரம். இது வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப நாடுகளில் நன்றாக வளர்க்கூடியது. தமிழ் நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் வேலிக்காக இது பயிர் செய்யயப்படுகிறது. இது 30-35 வருடங்கள் வரை வளர்ந்து பயன் தரக்கூடியதாகும் இது தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டு பின்னர் போர்த்து கீசியர்களால் ஆப்பிரிகா மற்றும் ஆசிய நாடுகளிக்கு கொண்டு வரப்பட்டவை. வரட்சியைத் தாங்கி வளர்க்கூடிய பயிராக இருப்பதாலும் தரிசு நிலங்களில் பயிரிடக் கூடிய பயிராகக் கருதப்படுகிறது. இதன் இலைகள் நன்கு அகலமாக விரிந்து 3-5 பிளவுகளை நுனியில் கொண்டதாகவும் நல்ல கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். 8 செ.மீ. நீளமும் 6 செ.மீ.அகலமும் உடையதாக இருக்கும். இதன் மலர்கள் கொத்தாகப்பூக்கும் தன்மையுடையது. இதன் தண்டு மிருதுவாகவும் 6 செ.மீ.முதல் 23 செ.மீ.வரை நீளமுடையதாகும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக வெப்பமான காலங்களில் பூக்கும் காய்கள் கரு நீல நிறத்திலும் பெரிதாக இருக்கும். ஒரு கொத்தில் சுமார் 10 க்கு மேலான காய்கள் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலிருந்து 4 மாதங்களில் மஞ்சளாக மாறி விதைகள் முற்றி வெடிக்கும். விதையிலிருக்கும் வெள்ளையான சதையிலிருந்து பயோ டீசல், எண்ணெய், புண்ணாக்கு கிளிசரால் கிடைக்கும்.

8. மருத்துவப் பயன்கள் -: இலை தாய் பாலையும் உமிழ் நீரையும் பெருக்கும், பால் இரத்தக்கசிவை நிறுத்தவும், சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படும். இது சோப்புத் தயாரிக்கவும், இதில் ‘ஜெட்ரோபைன்’ எனப்படும் ஆல்க்கலாய்டு புற்று நோய் எதிர்ப்பிற்கும், தோல் வியாதிகளுக்கும் கால்நடைகளின் புண்களுக்கும் ஈக்களினால் உண்டாகும் தொல்லைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சிக் கொல்லியாகவும், உராய்வு காப்பு பொருள் தயாரிக்கவும், உருவமைப்பு செய்யும் பொருட்களுக்கும், அழகு சாதனப் பொருட்களாகவும் மின் மாற்றி எண்ணெயாகவும் நீண்ட தொடர் எரிசாராயமாகவும், தோல் பதனிடவும், ஒரு வகை பிசின் தயாரிக்கவும், நூற்பாலைகளில் பயன்படும் எண்ணெயாகவும் தீ தடுப்பு சாதனங்களாகவும் பயன்படுகிறது. மேலும் இந்த மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கருநீல வண்ணம் துணிகளுக்கும், மீன் வலைகளுக்கும் நிறம் கொடுப்பதற்குப் பயன்படுகிறது. காட்டாமணக்கு இலைகள் பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகப்பயன்படுகிறது.

இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும். ஒரு படி நீரில் ஒரு பிடி இலையை போட்டு வேகவைத்து இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒத்தடம் கொடுத்து, வெந்த இலைகள் வைத்துக் கட்டப் பால்சுரப்பு உண்டாகும்.

விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டக் கட்டிகள் கரையும் வலி அடங்கும்.

இளங்குச்சியால் பல் துலக்கப் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் தீரும்.

காட்டாமணக்கு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண், சிரங்கு ஆறும்.

பாலை வாயில் கொப்பளிக்க வாய்புண் ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும். புண் சீழ் பிடிக்காமல் ஆறும்.

வேர்ப்பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக்காயளவு பாலில் கொடுத்து வரப் பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெருவயிறு, குட்டம் ஆகியவை தீரும்.

வரிகுருமத்தை என்னும் ஆற்றுத்தும்மட்டி

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.வரிக் குருமத்தை என்னும்  ஆற்றுத்தும்மட்டி கொடி பற்றி தெரிந்துகொள்வோம்.
1. மூலிகையின் பெயர் :-ஆற்றுத்தும்மட்டி.
2. தாவரப்பெயர் :- CITRULLUS COLOCYNTHES.
3. தாவரக்குடும்பம் :- CUCURBTACEAE.
4. வகைகள் :- பெரிய தும்மட்டி, சிறு தும்மட்டி என இரு
வகைப்படும்.
5வேறு பெயர்கள் -: கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி
'Bitter Apple' என்றும் சொல்வர்.
6. பயன்தரும் பாகங்கள்- இலை, காய், வேர் ஆகியவை
மருத்துவப் பயனுடையவை.
7. வளரியல்பு :- ஆற்றுத்தும்மட்டியின் தாயகம்
மெடட்ரேனியன் மற்றும் ஆசியா. 1887 ல் துருக்கி,
Nubia and Jrieste ல் இதைக்கண்டு பிடித்தார்கள்.
ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம்
காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான
இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட
இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப்
படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளை
யுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து
போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை
வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத்
தன்மை அதிலம் இருக்கும். விதைகள் மூலம்
இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
8. மருத்துவப்பயன்கள் :- சமூலம் நுண்புழு கொல்லும்.
நஞ்சு முறிக்கும். காய் சிறு நீர், மலம் பெருக்கும்.

புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடஙுகளில் காயை
நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும்.

பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய்
புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக
உலர்த்திப் பொடித்து சமனெடை கலந்து அரைத்
தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ள
அனைத்து நஞ்சுகளும் முறியும்.

தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்து
விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி
விடும்.

பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய்
பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய்,
வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து
அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சல
வணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம்,
திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம்,
சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சன்ன
லவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப்
போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத்
தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும்
2,3 தேக்கரண்டி( 4 முறை பேதியாகுமாறு)
4,5 நாள்கள் சாப்பிட்டு வர வாதநீர், கிருமிகள்
ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு,
இடுப்புவலி, வாயு, ருதுச்சூலை முதலியவை
தீரும்.
துமட்டிக்காய், எலுமிச்சம்பழம், வெள்ளை
வெங்காயம், நொச்சி, இஞ்சி இவற்றின்
சாறுவகைக்கு 1 லிட்டர் கலந்து சிறு தீயில்
காய்ச்சி 1 லிட்டராக வற்றி வரும் போது
இறக்கி ஆறவைத்துக் கல்வத்திலிட்டு ரசம்
லிங்கம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம்,
வெங்காயம், கடுகு, மஞ்சள், வெந்தயம்,
மிளகு, காந்தம், நேர்வாளம் வகைக்கு
10 கிராம் பொடித்துச் சேர்த்து மெழுகுப்
பதமாய் அரைத்து தூதுளங்காய் அளவாக
வெல்லத்தில் பொதித்து10 நாள்கள் காலை
யில் மட்டும் கொடுத்து வர வயிற்று நோய்கள்
குன்மம், வாயு தீரும்.